யாழில் வாக்காளர் எண்ணிக்கை குறைகிறது
யாழ் தேர்தல் அலுவலகம் |
இலங்கையின் வடக்கே யாழ் தேர்தல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாக்காளர் பதிவுகளின்படி, கிட்டத்தட்ட 45 வீதம் குறைவடைந்துள்ளதாக முதற்கட்ட கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கின்றது.
கடந்த வருடம் வரையிலான பதிவுகளின்படி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்கள் இருந்துள்ளனர். ஆயினும் தற்போதைய புதிய பதிவுகளின்படி, இந்த எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்திருக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் வாக்காளர் பதிவுகள் புதுப்பிக்கப்படுவது வழக்கம். ஆயினும் இந்த வருடம் இந்தப் பதிவுகள் விசேட கவனமெடுத்துச் செய்யப்பட்டதன் மூலம், ஏற்கனவே பதிவுகளில் இருந்த வெளிநாடுகளில் உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதையடுத்து, யாழ் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட கணி;ப்பின்படி தற்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றார்கள். வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியையடுத்து, நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் நான்கு வருடங்களில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின்போது குறைவடையலாம் என கூறப்படுகின்றது.
அத்துடன் வாக்காளர்கள் மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் செய்யப்படடு வருகின்ற தேர்தல் மாவட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள், மேல் படிப்பிற்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் எண்ணிக்கை என்பவற்றிலும் வீழ்ச்சி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment